முன் கதை சுருக்கம்... |
---|
ஜெய்யின் அப்பா தனசேகர் தனக்கும் இளமையில் ஒரு ஒரினக்காதலும் ஒரு ஓரினச்சேர்க்கை அனுபவமும் இருந்ததாக சொல்லி ஜெய்க்கு மேலும் அதிர்ச்சி கொடுக்கிறார். |
கார் ஹாரன் சத்தம் கேட்டு வனஜா எழுந்து வந்து வராண்டாவின் கதவை திறந்தபோது கார் காம்பவுண்டுக்குள் ஏற்கனவே வந்து, அதிலிருந்து ஜெய்யும் பிரபாகரும் ஆளுக்கொரு பக்கமாக இறங்கியிருந்தார்கள். வனஜாவுக்கு பிரபாகரின் கிட்டத்தட்ட பரதேசி கோலத்தை பார்த்ததும் அவன் மீது பரிவு ஏற்பட்டாலும், தன்னை மீறி சென்ற கோபம் அதிகமாக இருந்ததால் வராண்டா கதவை திறந்துவிட்டு தன் அறைக்குள் போய்விட்டார். இதை கவனித்த பிரபாகருக்கு சங்கடமாக இருந்தது. வாசற்படியில் கால்வைக்க தயங்கினான். தனசேகர் காரை ரிமோட் லாக் மூலம் பூட்டிவிட்டு வாசலை அடைந்தபோது பிரபாகர் தயக்கத்துடன் நின்றுக்கொண்டிருந்தான். அவனுடையை இடுப்பில் மென்மையாக கைவைத்து நகர்த்தி தள்ளியவாறே “உள்ளே வா பிரபா.. உங்க அத்தையோட கோபமும் நியாயமானது தானே… அவளை காலையிலே சமாதானப்படுத்தலாம்..” – என்றார் தனசேகர்.
உள்ளே வந்ததும் தனசேகர் ஜெய்யிடம் “பிரபாவுக்கு உன்னோட கேஷுவல் டிரஸ் எடுத்துக்குடு…” என்று சொல்லிவிட்டு பிரபாகரிடம் திரும்பி “போய் குளிச்சுட்டு டிரஸ் மாத்திட்டு படுத்து தூங்கு… எனக்கு தூக்கத்துக்கு கண்ணு எரியுது… எதுவா இருந்தாலும் காலையிலே பேசிக்கலாம்” என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு போனார். அதற்குள் ஜெய் உற்சாகமாக பிரபாகரிடம் துண்டை நீட்டியபடி “பிரபா! முதல்ல நீ போய் குளிடா… நான் அதுக்குள்ளே உனக்கு டிரஸ் எடுத்துட்டு வந்துடுறேன்..” என்றான்.
பிரபாகர் “சரிடா குட்டி..” என்று சொல்லிவிட்டு துண்டை கையில் எடுத்துக்கொண்டு பாத்ரூமை நோக்கி நடக்க, ஜெய் தான் இருந்த இடத்தில் இருந்து “பிரபா… உனக்கு ஷார்ட்ஸ் வேணுமா இல்லை லுங்கி வேணுமா?” என்றான்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
“எதுன்னாச்சும் பரவாயில்லைடா…”
“லுங்கியே எடுத்துட்டு வர்றேன்… அது தான் உனக்கு வசதியாயிருக்கும்… அப்புறம் என்னோட பிரிண்டட் டேங்க் டாப்ஸ் போட்டுக்கோடா… உனக்கு பார்க்க நல்லா இருக்கும்… நீ குளிச்சு முடிக்கிறதுக்குள்ள கொண்டு வந்துடுறேன்… ம்ம்ம்… புது ஷேம்பூ பாட்டில் மேலே ஷெல்ஃபுல இருக்கும்.. அதை எடுத்துக்கோ” என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு ஓடினான்.
அறைக்குள்ளே தனசேகர் வனஜாவின் அருகில் உட்கார்ந்து “நான் காலையிலே சீக்கிரம் எழுந்திருக்கனும்… நீ எழுந்து ஒரு டீ மட்டும் போட்டு குடுத்துடு” என்றவாறு அவரருகில் படுத்தார்.
“எதுக்கு உங்க தங்கச்சி பையனை நான் வேணாம் வேணாம்னு சொல்ல சொல்ல வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க? இந்த வீட்டுல நான் வேலைக்காரி மட்டும்னு சொல்லாம சொல்றீங்களா?” – சிடுசிடுத்தார் வனஜா.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
Loading ... |
“டேய் சூரப்பையலே! குளிச்சிட்டு அதே அழுக்கு ஜட்டிய போட்டுக்காத… என்னோட பீரோவுல புதுசு ஒரு பாக்கெட் இருக்கும்… எடுத்துட்டு வர்றேன். Black colour OK-வா? என் கிட்டே அது மட்டும் தான் இருக்கும்… அப்புறம்… முதல் வேலையா நீ போட்டிருந்த எல்லா டிரஸ்சையும் கழற்றி laundry basket-ல போட்டுடு.. அது அப்படிடா கூச்சமே படாம குப்பை மேட்டுல உட்கார்ந்திருந்தே… நாத்தம் குடலை குமட்டலை? கருமம் புடிச்சவண்டா நீ! த்தூ…” ஜெய் தன் அறைக்குள் இருந்து பாத்ரூமில் இருக்கும் பிரபாகரிடம் இரைந்து சொல்லிக்கொண்டிருக்க, அந்த நள்ளிரவு அமைதியில் ஜெய்யின் குரல் உற்சாகத்தோடு வீடெங்கும் ஒலித்தது. அது வனஜாவின் காதிலும் விழுந்தது.
“போடி பைத்தியக்காரி… ஹால்ல உன் பையனோட குரல்ல இருக்குற சந்தோஷத்தை கவனிச்சியா? ஒரு வாரமா அவன் உயிரோட இருக்கானான்னு சந்தேகம் வர்ற அளவுக்கு ஒடிஞ்சு போயிருந்தவன் இப்போ பாரு.. அவனுக்கு கேஷுவல்ஸ் எடுத்து குடுடான்னா ஜட்டி கலர் முதற்கொண்டு போட்டுக்க ஷார்ட்ஸா, லுங்கியா… குளிச்சிட்டு கொஞ்ச நேரத்துல தூங்கப்போறவனுக்கு என்ன டிரஸ் போட்டா பார்க்க நல்லா இருக்கும்… எது போட்டா அவனுக்கு வசதியாயிருக்கும்னு பார்த்து பார்த்து செய்யுற அழகென்ன.. உன் பையன் அர்த்த ராத்திரியிலே பண்ற அலப்பரை பார்க்கவே சந்தோஷமா இருக்குல்ல? இதை பார்த்து உச்சி குளிர்றத விட ஒரு பெத்தவனுக்கு வேற என்னடி சந்தோஷம் வேண்டியிருக்கு? அதுக்கு தான் ஈகோ பார்க்காம நானே போய் பிரபாகரை போய் கூட்டிட்டு வந்தேன்.. சரி! நீ பிரபாவை பார்த்தியா?”
“ஆமாங்க… கவனிச்சேன்… பிரபா ஏன் அப்படி இருக்கான்? என்ன ஆச்சு?” வனஜாவின் கோபம் ரொம்ப நேரம் நிலைக்கவில்லை.
“எப்படி உன் பையனோட உயிர் அவன் கிட்டே இருக்கோ அதே மாதிரி அவனும் உன் பையன் மேலே உயிரே வச்சிருக்கான்… அவனும் பைத்தியம் பிடிச்ச மாதிரி குப்பை மேட்டுல தெரு நாய்ங்க கூட சண்டை போட்டுட்டு இருந்தான்… அதனால தான் இனிமேலும் அவனை அங்கே விட்டு வைக்கிறது ரெண்டு பேருக்கும் நல்லதில்லைன்னு கூட்டிட்டு வந்துட்டேன்…”
“அது சரி! ஜெய் மேலே அவ்வளவு உயிரா இருக்குறவன் எதுக்கு அவனை விட்டுட்டு அவசர அவசரமா வீட்டை விட்டு வெளியே போகனும்?
“ஹா! ஹா! அது பருவ வயசு கோளாறு. உன் பையனுக்கு கல்யாண பேச்சு ஆரம்பிக்கவும் அவனுக்கு பயம் வந்துடுச்சு.. கட்டிக்கபோறவ வந்ததும் ஜெய்யோட கவனம் எல்லாம் அவ மேலே போய், இயல்பா ஜெய் இவனை ஒதுக்கிறதை விட முன்னாடியே தானா ஒதுங்கிக்கிறது நல்லதுன்னு போயிட்டான்… மாறுவேஷம் போட்ட possessiveness… தனக்கு பிடிச்சவங்களை அடுத்த கைக்கு போறதை பாக்க முடியாம தன்னை தானே கஷ்டப்படுத்திக்கிற பித்து”
“ஜெய்க்கு பொண்டாட்டி வந்தா இவனை எதுக்குங்க ஒதுக்கப்போறான்…? பொண்ண பார்த்த கிறுக்குல அப்படி இப்படி வழிஞ்சாலும் அவனுக்கு இவன் தானே எல்லாமே? ஒருவகையிலே இவனுக்கு தங்கச்சி முறை தானே வரும்? பிரபாவுக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு? எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்க தோணுதோ?” தாடையில் கைவைத்து அங்கலாய்த்தார் வனஜா.
“அதை சொல்லி புரிய வச்சு கூட்டிட்டு வந்திருக்கேன்… நீ ஒன்னு பண்ணு… நாளைக்கு காலையிலே செல்விக்கு ஃபோன் பண்ணி அவளை ஞாயிற்றுக்கிழமை காலையிலே இங்கே இருக்குற மாதிரி வரச்சொல்லு… காரணம் எதுவும் சொல்லாத… பிரபாவுக்கும் பொண்ணு பாக்க ஆரம்பிக்க சொல்லனும்… ஜெய்க்கு தேடும்போது இவனுக்கும் சேர்த்து நாமளும் தேடலாம்.. ஜெய்யோட கல்யாணத்தோட சேர்த்து அவனோடதையும் நடத்திடனும்… இல்லைன்னா ஒருத்தன் தனியா இருந்தா கூட ரெண்டு பசங்களும் ஏதாவது குழப்பத்தை பண்ணி வச்சாலும் வப்பானுங்க… அதுக்கு இடம் குடுக்க கூடாது” தனசேகர் சிரித்தார்.
“சரிங்க… நான் காலையிலே செல்விக்கு கூப்பிடுறேன்” வனஜா சரிந்து படுத்தார். இதற்குள் ஹாலில் நடமாட்டங்கள் எல்லாம் நின்றது போல தோன்றியது.
“என்னோட mobile-ஐ charger-ல போடு..” வனஜாவிடம் நீட்ட, “mobile charges இங்கே இல்லையே… ஒருவேளை ஹால்ல இருக்கோ?” என்றார்.
“சரி! நீ இரு.. நான் போய் ஹால்ல charger-ல போட்டுட்டு வர்றேன்..” தனசேகர் எழுந்து போனார்.
ஹால் விளக்கை போட, Sofa-வில் படுத்திருந்த பிரபாகர் சட்டென்ற விளக்கு வெளிச்சம் கண்ணை கூச, கண்ணை திறந்தான்.
“என்னடா பிரபா.. இங்கே படுத்திருக்கே?”
“நான் இனிமேல் தினமும் இங்கேயே படுத்துக்குறேன் மாமா…” பிரபாகரின் கண்கள் தரையில் நிலைகுத்தியிருந்தது.
தனசேகர் பிரபாகரின் கையை பிடித்து ஜெய்யின் அறைக்குள் இழுத்துச்சென்றார். உள்ளே அறைக்குள் விளக்கை போட, கட்டிலில் படுத்திருந்த ஜெய், அப்பாவும் பிரபாகரும் ஒன்றாக வருவதை பார்த்து எழுந்து உட்கார்ந்தான்.
“நீ படுடா..” என்று சைகையும் வார்த்தையும் சேர்த்து சொல்லிவிட்டு, பிரபாகரை கட்டிலில் உட்கார வைத்தார். ஜெய்யின் அறைக்கதவை சார்த்திவிட்டு, தாழ்வான குரலில் “ஏன் பிரபா வெளியே படுத்தே? பூட்டின ரூமுக்குள்ளே நீங்க ரெண்டு பேரும் செக்ஸ் வச்சுக்கிட்டு இருக்கீங்கன்னு நான் நினைச்சுக்குவேன்னா?”
பிரபாகர் மட்டுமல்ல… ஜெய்யும் இந்த நேரடி தாக்குதலை எதிர்பார்க்கவில்லை.
“ஸீ.. நான் அப்போ சொன்னேன் இல்லை? நம்ம சமூகம் ரெண்டு பேர் அவங்க Gays-ன்னு சொன்னா அவங்க மனசை விட, அவங்களை செக்ஸ் கோலத்துல கற்பனை பண்ணி பாக்குறதால தான் ஓரினச்சேர்க்கையாளனோன்னு சந்தேகப்படுறவங்க கூட தங்களோட எண்ணத்தை வெளிக்காட்டிக்கிறதில்லைன்னு…. இப்போ நீங்களும் அதே தானே நிரூபணம் பண்றீங்க?”
“அப்பா… நான் தான் அவனை காத்தாட இருக்கும்னு…” ஆரம்பித்த ஜெய்யை கையை விரித்து அடக்கினார்.
“இதே ரூம்ல தானே கடந்த ஒருவருஷமா வெயில், குளிர், மழைன்னு எல்லா சீஸன்லேயும் ஒன்னா தூங்கிட்டு இருந்தீங்க… இன்னைக்கு என்ன திடீர்னு பருவநிலை உங்களை பாதிக்குது?”
ஜெய், பிரபாகர் இருவரிடமும் பதில் இல்லை.
“நான் திரும்பவும் சொல்றேன்… நீங்க பதில் சொல்லவேண்டியதும், சுயபரிசோதனைகள் பண்ணிக்கவேண்டியதும் உங்களுக்கு மட்டுமே… எனக்கு நீங்க என்ன prove பண்ண முயற்சி பண்றீங்க? நான் பார்க்காதப்போ நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரோட சுண்டுவிரல் கூட மத்தவங்க மேலே படாம ‘சுத்தமா’ இருக்கீங்கன்னா? நான் என்ன நீங்க பூட்டின கதவுக்கு பின்னாடி நீங்க செக்ஸ் வச்சுக்குறீங்களா இல்லையான்ன்னு நினைச்சு மண்டையை உடைச்சிட்டு இருக்குற அவ்வளவு கேவலமான ஆளுன்னு நினைச்சீங்களா?..”
“மாமா…” பிரபாகர் பதறினான்.
“திரும்ப திரும்ப சொல்றேன்… உங்க அன்பை வெளிக்காட்டுற விதமாவோ, இல்லை அரிப்பெடுத்ததுக்காகவோ.. என்ன எழவுக்காகவோ இருந்தாலும் சரி.. நீங்க செக்ஸ் வச்சுக்குறது உங்களுக்கு சந்தோஷமா இருக்குன்னா அதை நான் தடுக்கப்போறதில்லை. தடுக்கவும் முடியாது ஏன்னா நீங்க ரெண்டு பேரும் சட்டப்பூர்வமா சொந்த முடிவுகளை எடுக்கக்கூடிய வயசுக்கு வந்தவங்க… ஆனா உங்களோட உறவுக்கான அடிப்படை காரணத்தையும், sexual orientation-ஐயும் முதல்ல தெளிவு பண்ணிக்கோங்க… ஒரு அப்பாவா நான் உங்ககிட்டே கேக்குற கேள்விக்கான பதில் அது மட்டும் தான்.. பிரபா! நீ இனிமே வழக்கம் போல இந்த ரூமுக்குள்ளேயே… குறிப்பா சொல்லனும்னா இவன் கூட ஒரே கட்டில்லேயே தூங்கு… உங்க மனசுக்கு மட்டும் உண்மையா இருங்க” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
ஜெய் எழுந்து வந்து தனசேகரை கட்டிக்கொண்டான். அவன் கண்ணீர் தனசேகரின் தோள்களை நனைத்தது. “சாரிப்பா… மாடர்ன் யூத்துன்னு நினைச்சுக்குட்டு நாங்க தான் நீங்க பெரியவங்களை ரொம்ப பிற்போக்கா எடை போட்டிருக்கோம்…”
“போய் படுடா… நான் காலையிலே சீக்கிரம் எழுந்திருக்கனும்… உங்க ரவுசு ஆஃப் இண்டியா தாங்க மாட்டேங்குது… மனுஷனை நேரத்துக்கு தூங்க விடமாட்டேங்குறீங்க” என்று நகர்ந்தவர், “இன்னைக்கு வாழ்க்கையிலே என்ன முக்கியமான பாடம் கத்துக்குட்டீங்க?” என்று கேட்டார்.
“Browser-ல Password-ஐ save பண்ணக்கூடாதுன்னு மாமா…” பிரபாகரின் வழக்கமான குறும்புத்தனம் எட்டிப்பார்க்க, “ஹா ஹா… கஷ்டம்டா உங்களை வச்சுக்கிட்டு” என்று சிரித்தபடி அவன் கன்னத்தில் தட்டிவிட்டு வெளியே சென்று மீண்டும் அறைக்கதவை சார்த்தினார் தனசேகர்.
காலையில் எழுந்து பிரபாகர் பல் துலக்கிவிட்டு கிச்சனுக்கு வந்தபோது ஜெய் டைனிங்க் டேபிளில் உட்கார்ந்திருக்க, வனஜா காஃபி கலந்துக்கொண்டிருந்தார். பிரபாகரை பார்த்து இயல்பாக “உனக்கும் காஃபி கலக்கட்டுமா பிரபா?” என்றார்.
“சரிங்க அத்தை..” வனஜா தன் மீது கோபமாக இருப்பார் என்று எதிர்பார்த்த பிரபாகர், அவர் அதைப்பற்றி எதுவும் கேட்காததை நினைத்து சங்கடமாக டைனிங் டேபிளின் மற்றொரு சேரில் உட்கார்ந்தான்.
வனஜா கஃபி ஆற்றிக்கொண்டே பொறுமினார்.. “ஈனனுக்கு இருவேலை-ங்குற மாதிரி.. இப்போ எல்லா பொட்டியையும் திரும்ப தூக்கிட்டு வரனுமா? பக்கத்துல லிபர்ட்டி ஷோரூம்ல கிளியரன்ஸ் சேல் போட்டிருக்கான். போய் நமக்கு வாக்கிங் ஷூஸ் வாங்கலாம்னு நினைச்சிட்டு இருந்தேன்… நீ போய் உன்னோட சாமானை எல்லாம் எடுத்துட்டு வந்து வீட்டுல அடுக்கி வச்சுட்டு சாயங்காலம் நாம போகும்போது என்ன மிஞ்சியிருக்கப்போகுதோ… எல்லாம் பெரியாளாயிட்டோங்குற வயசு திமிரு” என்று செல்லமாக திட்டிக்கொண்டிருக்க, பிரபாகர் அவரை பின்னாடி தோளோடு கட்டிப்பிடித்தபடி “சாரி அத்தை… நான் உங்களை எல்லாம் விட்டுட்டு போக நினைச்சது தப்பு தான்” என்றான்.
வனஜா அவன் கன்னத்தை தட்டியபடி “இனிமேலாச்சும் இந்த மாதிரி கிறுக்குத்தனமா எதுவும் பண்ணி வைக்காதே… உங்க அம்மா அப்பாவை நாளைக்கு வரச்சொல்லியிருக்கேன்… அவங்கள விட்டே உனக்கு ரெண்டு அடி போடனும்” என்றார்.
“ஐயோ! அவங்க எதுக்கு இப்போ… போச்சு போச்சு.. என் காதுல ரத்தம் வருமே” பிரபாகர் தலையை பிடித்துக்கொள்ள, ஜெய் அவன் தோளில் கைபோட்டு “உன்னை காப்பாத்த தான் நான் இருக்கேனே நண்பா… யாமிருக்க பயமேன்?” என்றான்.
“நண்பேண்டா…” என்று பிரபாகர் ஜெய்யின் இடுப்பை சுற்றி வளைத்து வெற்றிக்கொடி போட.. ஒரு வாரத்துக்கு பிறகு அந்த வீட்டில் மீண்டும் சிரிப்பு சத்தம் எட்டிப்பார்த்தது.
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 25/01/2017
Alternate Blogger URL: https://orinakadhalkadhaigal.blogspot.com/2017/01/17.html
Feedback |
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
கதை எப்படி இருக்கு? |
Picture of the day |
---|