முன் கதை சுருக்கம்... |
---|
ரொம்ப நாட்களுக்கு பிறகு தன் வாழ்க்கையில் வந்துள்ள தன்னை ரவி ஆசையுடன் ஏற்றுக்கொள்வான் என்று எதிர்பார்த்த அவினாஷுக்கு ரவியின் இலை மேல் தண்ணீர் போல ஒட்டாத நடவடிக்கைகள் ஏமாற்றத்தை கொடுக்கிறது. அவினாஷ் ரவியை நெருங்க முயற்சிக்க, ரவி தங்களுடைய உறவு நிலைக்காது என்று உணர்ந்து தான் நகர்ந்துவிட்டதாக சொல்கிறான். இத்தனை நாட்கள் ரவியின் நினைவிலேயே உயிர் வாழ்ந்திருந்த அவினாஷ் என்ன செய்வான்? |
அந்த ஸ்டார் ஹோட்டல் அறையினுள் சுத்தமான வெள்ளை படுக்கை விரிப்பு, மங்கிய வெளிர் மஞ்சள் வெளிச்சம், வெளியே நகரத்து சாலையின் பரபரப்பு தெரிந்தாலும் அறைக்குள்ளே இருந்த நிசப்தம்… எல்லாம் சேர்ந்து அவினாஷுக்கு தேவையான அமைதியை கொடுத்தது. இதற்கெல்லாம் மேலாக சமீரில் மடியில் தலை வைத்து படுத்திருந்ததும், தன் தலையை சமீர் தடவிக்கொடுத்துக் கொண்டிருப்பதும் அவினாஷுக்கே ஏதோ ஒரு பாதுகாப்பான உணர்ச்சியை கொடுத்தது. தன் கண்ணில் இருந்து கண்ணீர் வெளிப்பட்டு அது சமீரில் தொடையில் நனைத்தால் அவன் பதறிப்போவானே என்று அவினாஷ் கஷ்டப்பட்டு தன் உள்ளக்குமுறல்களை அடக்கிக்கொண்டிருந்தான். சமீருக்கும் அவினாஷின் மனதில் அடித்துக்கொண்டிருக்கும் புயலை பற்றி தெரிந்திருந்ததால் அவனே அவசியப்படும் போது அதை வெளிக்கொட்டட்டும் என்று அமைதியாக இருந்தான். எவ்வளவு நேரம் அப்படி கழிந்தது என்று இருவராலும் கணிக்கமுடியவில்லை.
“அவி! சாப்பிட ஏதாச்சும் order பண்ணலாமா?” சமீர் தான் முதலில் பேச்சை ஆரம்பித்தான்.
அவினாஷ் கண்ணை துடைத்தபடி எழுந்து சமீரின் தோளில் சாய்ந்துக்கொண்டு “சாரிடா! பசிக்குதா?” என்று கேட்டான்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
“இல்லைடா… உன்னை எப்படி திரும்ப நிஜத்துக்கு அழைச்சுட்டு வர்றதுன்னு சும்மா ஒரு conversation starter தான்… May be இன்னும் ஒரு ஒன்னரை-ரெண்டு மணி நேரத்துக்கு அப்புறம் Dinner-க்கு போகலாம். சரியா?” சமீர் அவினாஷின் கைகளை கோர்த்துக்கொண்டு, தலையை திருப்பி அவினாஷின் நெற்றியில் முத்தம் வைத்தபோது அவினாஷ் அதை தவிர்க்க முயற்சிக்கவில்லை.
“என்னோட குட்டி குழந்தைக்கு என்ன பிரச்சனை? வாயை திறந்து சொன்னா ஏதாச்சும் பண்ண முடியுமான்னு பார்க்கலாம்” – சமீர் அவினாஷின் கன்னத்தை தடவினான்.
“ஒன்னுமில்லை…” அவினாஷ் சட்டென்று இறுக்கமாக, சமீர் “அவி! எதுவா இருந்தாலும் வெளியே கொட்டிடு… அப்படி பண்ணுனதுக்கு அப்புறம் நீ அந்த விஷயத்தை பார்க்கும்போது ஒருவேளை உனக்கே அதுல இருக்குற குறைகள் தெரியலாம்… Now I am just a listener… a bouncing board” சமீர் கண்ணை மூடிக்கொண்டி காதை மட்டும் அவினாஷிடம் கொடுப்பது போல கன்னத்தை காட்டினான்.
அவிணாஷுக்கு சமீரின் இந்த pose சிரிப்பை வரவழைக்க, குப்பென்று சிரிப்பு வந்தது. சிரித்ததும் அவினாஷின் மனது பாரம் குறைய, நடந்தவற்றை அப்படியே சொன்னான்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
![]() |
“சரி அவி! இதுல எந்த part உன்னை காயப்படுத்தியிருக்கு? ரூபா உன்னோட பணத்தை திரும்ப குடுத்ததா? இல்லை ரவி பழைய ரவியாட்டம் உன் கிட்டே passionate-ஆ இல்லாததா?”
அவினாஷ் தடுமாறினான்.
“அவி! ரூபா உன்னை திரும்ப contact பண்ணினதுக்கு காரணம் தான் உனக்கு அநியாயம் பண்ணிட்டதா நினைச்சுக்கிட்ட அவங்களோட குற்ற உணர்ச்சி… சரியா ரவியோட உடம்பு சரியில்லாத சமயத்துல உன்னை கூப்பிட்டிருக்குறது ஒன்னு யதேச்சையா நடந்ததா இருக்கலாம் இல்லை உன்னை திரும்ப கூப்பிடுறதுக்கு ஒரு காரணமா இருக்கலாம்… நீ வந்ததும் அவங்க மனசுல இருந்து குற்ற உணர்ச்சி ஏற்படுத்துன பாரம் இறங்குன மாதிரி நிம்மதி அவங்களுக்கு”
அவினாஷால் பதில் சொல்ல முடியவில்லை. அவன் பேசட்டும் என்று கொஞ்சம் அவகாசம் கொடுத்து சமீர் அமைதியாக அவினாஷின் விரல்களை ஒவ்வொன்றாக தன் கையில் கோர்த்துக்கொண்டிருந்தான்.
அவினாஷ் தன் ஏமாற்றத்துக்கு என்ன காரணம் தேடுவது என்ற நீண்ட யோசனைக்கு பிறகு “ரூபா அண்ணி ஹாஸ்பிடல் பில்லா கட்டின பணத்தை திரும்ப குடுத்தது எனக்கு ரொம்ப hurting-ஆ இருக்கு”
“கமான் அவி! அவங்க நிலைமையிலே உன்னை வச்சு பாரு… அவங்க உன்னை ரவியை பார்க்க கூப்பிட்டாங்க.. உன்னோட அருகாமை ரவியை திரும்பவும் பழையபடிக்கு கொண்டுபோக உதவும்னு நம்புனாங்க… சொல்லப்போனா அவங்க உன் கிட்டே எதிர்பார்த்தது அந்த உதவியை மட்டும் தான். ஆனா இந்த சமயத்துல அவங்க உன் கிட்டே இருந்து பணத்தை வாங்கிக்கிட்டா இத்தனை நாள் கழிச்சு உன்னை கூப்பிட்டதுக்கான அர்த்தமே மாறிடுது இல்லை? ஒருவேளை உன் கிட்டே இருந்து பணத்தை வாங்கியிருந்தா அவங்க நீ ரவி மேலே வச்சிருக்குற காதலை exploit பண்ணி மருத்துவ செலவை உன் தலையிலே கட்டுன மாதிரி ஆயிடுமே… இல்லை உன்னால தான் அவர் அப்படி ஆனார்.. அதனால அதுக்கான பரிகாரத்தை நீயே பண்ணுன்னு பாரத்தை உன் மேலே போட்டதா ஆயிடாது? நான் ரூபாவை தப்பு சொல்லமாட்டேன். இப்படி ஒரு கஷ்டமான சூழ்நிலையிலும் அவங்களோட சுயமரியாதை ரொம்ப அபாரமானது. Hats Off to her. அவங்க மேலே எனக்கு மரியாதை அநியாயத்துக்கு கூடிக்கிட்டே போகுது…”
“ஆனா சமீர்! நான் ரவி அண்ணா குடும்பத்துல நானும் ஒருத்தனா தான் அவரோட Medical Bill-க்கு பணம் போட்டேன்.”
“அவி! நீ ரவி குடும்பத்துல ஒரு உறுப்பினர் மாதிரி… அழுத்தி சொல்றேன் “மாதிரி” தான்… ஆனா இன்னும் legitimate-ஆன உறுப்பினர் இல்லை. அப்படியே இருந்தாலும் எந்த வகையிலே? உனக்கும் ரவிக்கும் இருந்த affair பத்தி ரூபாவுக்கு ஒரு inkling இருக்குறதா வச்சுக்கிட்டாலும், எந்த பொண்டாட்டியாச்சும் வா.. வந்து ஆஸ்பித்திரி செலவுக்கு பணம் குடுத்துட்டு, என் புருஷனை பங்கு போட்டு எடுத்துக்கோன்னு கூப்பிடுவாங்களா?”
“என்னோட காதல் சுயநலமில்லாதது சமீர்! எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது… இது ஏன் இந்த உலகத்துக்கு புரியமாட்டேங்குது?” அவினாஷின் குரல் உடைய ஆரம்பித்தது.
“அவி! காதலும் உறவும் தனித்தனியான விஷயங்கள்… நிறைய கணவன் மனைவிங்க, அப்புறம் Live-in relationships-ல இருக்குற couples… எல்லாருமே ஏதோ ஒரு உறவுல இருக்காங்க… அவங்க எல்லாருக்குள்ளேயும் அடுத்தவங்க மேலே காதல் இருக்கான்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்லனும்… ஆனா ஒன்னா இருக்காங்க… அது மாதிரி உண்மையா காதலிச்சவங்க எல்லாரும் உறவுல நுழையுறாங்களா, இல்லை உறவுல வெற்றிகரமா இருக்காங்களான்னு கேட்டா அங்கேயும் நிறைய இல்லை-ங்குற பதில் தான் வரும். வருஷக்கணக்கா காதலிச்சவங்க கல்யாணம் ஆகி ஒரே வருஷத்துல விவாகரத்து கேட்டு கோர்ட் வாசல்ல படியேறுறதை பார்க்குறோமே…”
அவினாஷ் எதுவும் பேசவில்லை. சமீர் அவன் ஏதாவது பதில் சொல்வான் என்று பார்த்துவிட்டு பின்னர் மேலே தொடர்ந்தான்.
“அப்புறம் ரவி முன்ன மாதிரி intimate-ஆ இல்லைங்குறது உன்னை ரொம்ப காயப்படுத்தி இருக்குன்னு நினைக்கிறேன். Basically ரவியும் நீயும் தனித்தனியா பார்த்தா நல்லவங்க தான். ஆனா உங்களுக்குள்ளே ஏற்பட்டிருக்குற காதல் தவளைக்கும், எலிக்கும் நடுவுலே வந்த காதல் மாதிரி… பொருந்தாத காதல். எலியால தண்ணிக்குள்ள வாழ முடியாது, தவளையால எப்பவுமே தரையிலேயே இருக்க முடியாது. அது தண்ணிக்குள்ளாற தான் போகும்… அப்போ எலிக்கு மூச்சு முட்டும். அதனால வெறும் காதலை மட்டும் வச்சுக்கிட்டு எலியும் தவளையும் ஒன்னா வாழ முடியாது. ஒன்னா இருந்து ரெண்டு பேரும் செத்து தான் போகமுடியும். இந்த உண்மை ரவிக்கு புரிஞ்சிடுச்சு. ஏன்னா நீ அவரோட வாழ்க்கையிலே ஒரு அங்கீகரிக்கப்படாத பக்கமா தான் இருப்பே. அவர் வாழ்க்கையிலே ரூபாவும் மிட்டுவும் தான் சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட உறவுகள். கடைசி வரைக்கும் அவங்களுக்காகவாச்சும் தன்னோட காதலை ஒதுக்கிவச்சு வாழ்ந்தாகனும்னு அவருக்கு யதார்த்தம் உரைச்சிருக்கு.”
“ம்ம்ம்…” அவினாஷ் தன் பக்கம் தோற்றுக்கொண்டிருப்பதை பலவீனமாக பார்த்துக்கொண்டிருந்தான்.
“அவி… எனக்கு என்ன தோணுதுன்னா ரவி உன் கிட்டே physically intimate-ஆ இல்லாம இருந்தாலாச்சும் உனக்கு உண்மை புரிஞ்சு நீ உனக்காக ஒரு வாழ்க்கையை உருவாக்கிக்குவேன்னு அவர் நினைச்சதோட விளைவா இருக்கலாம். தன்னை உன் கிட்டே இருந்து விலகவைக்கிற cliched technique. ஆனா நீ இன்னும் உறவு இல்லாம தனி மனுஷனா இருக்குறதால் நீ இன்னும் இந்த practical உண்மையை புரிஞ்சுக்கலை.”
சிறிய இடைவெளி விட்டு சமீர் தொடர்ந்தான். “ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோ அவி! இப்போ சொல்றதை நான் உன் கிட்டே ஏற்கனவே சொல்லியிருக்கேன்… உனக்கு புரியுற வரைக்கும் நான் திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டே தான் இருப்பேன்… காதல்ங்குறது எதிர்ப்பார்ப்பில்லாததுன்னு சொல்லி அதை reciprocate பண்ணமுடியாத ஆளுங்க கிட்டே காமிச்சு அந்த emotion-ஓட purity-ஐ வீணடிக்கக்கூடாது. அப்படி பண்ணுனா அது நாம காதலுக்கு செய்யுற துரோகம். நம்மளோட காதலை யார் புரிஞ்சுகிட்டு reciprocate பண்ணுவாங்களோ அவங்களுக்கு தான் குடுக்கனும்… உனக்கு இந்த உண்மையை புரிஞ்சுக்க காலம் குடுத்த சந்தர்ப்பமா இதை நினைச்சுக்கிட்டு please move on”
அவினாஷ் சமீரின் பார்வையை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்து அறையில் இருந்த ஏதோ ஒரு பொருளை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால் அவனது முகபாவங்களும், அமைதியும், சீரான பெருமூச்சையும் பார்த்த சமீர் அவினாஷின் மனதுக்குள் ஏதோ மாற்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்பதை உணர்ந்து அவினாஷை அவன் போக்கில் விட்டுவிட்டு அமைதியாக உட்கார்ந்திருந்தான்.