இரு காதலர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்தித்துக்கொள்வதாக பிரிகிறார்கள். ஆனால் அவர்கள் அந்த இடத்துக்கு மீண்டும் குறித்த நேரத்தில் வரமுடியாதபடி சந்தர்ப்ப சூழ்நிலை வில்லனாகிவிடுகிறது. ஒருவர் மற்றவரை தொடர்பு கொள்ள தேவையான முகவரியோ இல்லை தொலைபேசி எண்ணோ இல்லாத காரணத்தால் அவர்கள் ஒரேயடியாக பிரிந்து போய்விடுகிறார்கள். பின்னர் விதிவசப்படி பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சேர்கிறார்கள். இது ஒரு வழக்கமான காதல் கதை போல இருக்கிறது அல்லவா? தமிழில் கூட நாம் “ஜே! ஜே!”, “உனக்கு 18 எனக்கு 20”, “தித்திக்குதே” மாதிரியான படங்களை பார்த்திருக்கிறோமே. அதை காதலர்கள் இருவரும் ஆண்கள் என்று மாற்றி, காட்சிகளை கொஞ்சம் கூடுதல் அழகியலோடு சேர்த்தால் இத்தாலிய படமான “Nuovo Olimpo” ரெடி!
கதைக்களம் 1978-ல் ஆரம்பிக்கிறது. ரோம் நகரத்தின் நடுவில் அமைந்துள்ள “Nuovo Olimpo” திரையரங்கம் க்ளாஸிகல் படங்களோடு சேர்த்து ஓரினச்சேர்க்கையாளர்களின் கூடும் இடமாகவும் அமைகிறது. பொதுவாக அவர்கள் தங்கள் இணைகளை திரையரங்கத்தில் பிக்கப் செய்து அங்குள்ள கழிப்பறையில் செக்ஸ் வைத்து குஜால்ஸாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு திரையரங்கத்தில் நமது கதாநாயகர்கள் சந்திக்கிறார்கள்.
ரோமில் படப்பிடிப்பு நடத்த வரும் திரைப்பட outdoor unit-ல் துணை இயக்குனராக பணிபுரியும் எனியா-வும், மருத்துவம் படிக்கும் பியட்ரோ-வும் (Andrea Di Luigi) ஒரு நாள் “Nuovo Olimpo” திரையரங்கத்தில் சந்திக்கிறார்கள். தங்கள் காம இச்சையின் வடிகாலுக்கு துணை தேடி வராமல் ஓடும் Classic திரைப்படத்தை பார்க்க வந்திருப்பது இருவரையும் இணைக்கிறது. கூடவே ஈர்ப்பும் வருகிறது. கழிப்பறைக்கு செல்லும் பியட்ரோவை பின்தொடரும் எனியா அவனை “approach” செய்ய, பியட்ரோ தான் எனியா மீது காதல் வயப்பட்டுவிட்டதாகவும், அவர்களது முதல் உடலுறவு இப்படி அவசரமாக, கழிப்பறையில் நடக்காமல் “special” ஆன இடத்தில் நடக்கவேண்டும் என்று சொல்கிறான்.
அதற்கேற்ப, தனது பியட்ரோ எனியாவை பாட்டியின் வீட்டுக்கு அழைத்து சென்று இருவரும் gay sex-ல் இணைகிறார்கள். உடலுறவுக்கு பிறகு அவர்களது காதல் அதிகமாகிறது. மாலை மங்கும் நேரத்தில் மொட்டைமாடியில் மீண்டும் உடலுறவு கொள்கிறார்கள். சலிக்க சலிக்க சாந்திமுகூர்த்தம் முடிந்ததும் இருவருக்கும் பசிக்கிறது. பியட்ரோ வீட்டில் தேடிப்பிடித்து ஃப்ரிட்ஜில் இருந்து ஒரு ஜாம் பாட்டிலை எடுத்து எனியாவுக்கு ஊட்டிவிடுகிறான். அது இருவருடைய வாழ்க்கையில் ஸ்பெஷல் நினைவாக மாறிவிடுகிறது. அடுத்த நாள் இருவரும் மாலை சந்திக்கலாம் என்று பேசிவைத்துக்கொள்ள, அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீஸூக்கும் நடுவில் ஏற்படும் கலவரம் இருவரையும் பிரித்துவிடுகிறது.
காலங்கள் உருண்டோட எனியா புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் ஆகிறான். அவன் எடுத்து வெளியிட்டிருக்கும் படத்தில் ஓரினக்காதலர்கள் ஜாம் ஊட்டிவிடும் காட்சியை பார்க்கும் மருத்துவரான பியட்ரோ எனியாவை கண்டுகொள்கிறான். இந்த சமயம் பியட்ரோவுக்கு திருமணம் ஆகியிருக்கிறது. எனியா openly gay-யாக come out செய்து தனது காதலனுடன் வாழ்ந்து வருகிறான். ஒரு படப்பிடிப்பில் கண்ணில் அடிபடும் எனியாவுக்கு பியட்ரோ சிகிச்சை அளிக்கிறான்.
அப்போது கண்கள் கட்டப்பட்ட நிலையில் எனியா பியட்ரோவிடம் அவனது குரல் பரிச்சயமானதாக சொல்கிறான். கண் குணமாகி கட்டுகள் பிரிக்க, தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு நன்றி சொல்லும் விதமாக பியட்ரோவின் மனைவி அளித்த விருந்தில் கலந்துக்கொள்கிறான் எனியா. கடைசியில் காதலர்கள் இருவரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள்.
வழக்கமாக ஓரினச்சேர்க்கையாளர்களின் பிரச்சனைகள், வாழ்க்கையை சுவாரசியமாக சொல்லும் Ferzan Ozpetek இம்முறை எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒரு candyfloss காதல் கதையை எடுத்திருக்கிறார். ஒருவேளை அவருக்கும் ஒரு மாறுதல் தேவைப்பட்டதோ என்னவோ. அதனால் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் மற்றும் அழகான நடிகர்கள் என்று அனைவரின் துணையையும் கொண்டு high production values, visually aesthetic காட்சிகள் என்று இருபதுகளில் இருக்கும் இளைஞர்களின் romance-ஐ அள்ளித்தெளித்துள்ளார். ஆனால் அவரது மற்ற படங்களில் இருந்த அழுத்தம் முற்றிலும் missing. லாஜிக் ஓட்டைகள் ஏராளம். ஆனாலும் எல்லாவற்றையும் மறக்கடிப்பது எது என்றால் அதன் நடிகர்களும், அழகான காட்சிகளும் மட்டுமே.
பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் இதை Netflix-ல் subtitles போட்டு பாருங்கள். வழக்கமாக கதைகள் எல்லாம் dark ஆக, மனதில் பாரம் ஏற்றும் விதமாக இருக்கும்போது இந்த ஓரினக்காதல் கதை எளிதாகவும், அழகாகவும் இருப்பது ஒரு மாறுதலை கொடுக்கும்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி