“எப்படிடா இருக்கே மாசு?” ரவியின் அப்பா அவரது நெருங்கிய நண்பரை கட்டியணைத்தபோது ரவிக்கு அவரது அன்பை உணரமுடிந்தது. “மாசு” என்கிற மாசிலாமணி மாமாவும் ரவியின் அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். மாசு மாமாவின் பையன் ரமேஷ் ரவியை விட 4-5 வருடங்கள் பெரியவன் என்பதால் இவனுக்கும் ரமேஷுக்கும் நட்பு என்று இல்லை. ரமேஷுடைய காலேஜ், மாசிலாமணி மாமாவின் வேலை என்று சில வருடங்களுக்கு முன்பு ஊரை விட்டு போன அவர்கள் குடும்பம் இப்போது தான் மீண்டும் கிணத்துகடவுக்கு வந்திருக்கிறது. இதற்கிடையில் ரவி சுந்தராபுரத்தில் உள்ள ஒரு கம்பெனியில் Networking Engineer-ராக வேலைக்கு சேர்ந்திருந்தான்.
வீட்டுக்குள் ஃபேன் மாட்டிக்கொண்டிருந்த ரமேஷ் வெளியே வந்து “வாங்க மாமா… உங்க நண்பரை பார்த்துட்டீங்கன்னா மத்தவங்க யாரும் கண்ணுக்கே தெரியமாட்டாங்களே?” என்று சிரித்தபடி ரவியின் அப்பாவை கையை பிடித்துக்கொண்டான். திரும்பி தன் மனைவியிடம் “வதனி! மாமாவுக்கும் எல்லோருக்கும் சேர்த்து காஃபி போடு” என்றான்.
“இப்போ காஃபி குடிக்கிறதுக்கு மாமா தான் சாக்கா கிடைச்சாரா? காலையிலே இருந்து நாலு காஃபி குடிச்சிட்டாருங்க மாமா.. இருந்தாலும் உங்க பேரை சொல்லி இன்னொன்னு வேணுமாம்…” என்று மகிழ்வதனி சிரிக்க, “நல்லா இருக்கியா தாயி? குழந்தை என்ன பண்றான்?” என்று ரவியின் அப்பா கேட்டார்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
“அவன் அவங்க பாட்டி கூட மாடு பார்க்க போயிட்டான்…. எல்லாரும் பேசிட்டு இருங்க.. நான் காஃபி போட்டுட்டு வர்றேன்…” வதனி நகர்ந்துக்கொண்டாள். வாசல் களத்தில் போடப்பட்டிருந்த கயிற்றுக்கட்டில்களில் எல்லாரும் அமர்ந்தார்கள்.
ரவிக்கு ரமேஷை பார்த்ததும் ஏனோ வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்தது. எதுவும் பேசவில்லை… ரமேஷும் ரவியின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாலும் ஏதும் பேசாமல் பெரியவர்களுடைய பேச்சுக்கு பதில் கொடுத்துக்கொண்டிருந்தான்.
ரவியின் அப்பா “ரமேஷு.. உங்க கம்பெனி தான் இங்கே சரவணம்பட்டியிலேயும் இருக்குன்னு மாசு சொன்னானே… இங்கேயே மாத்தல் வாங்கிட்டு வந்துட்டீனா உங்கப்பனுக்கும் துணையா இருக்குமில்ல?” என்று கேட்டார்.
“என்னோட Skill Set-க்கு இங்கே இப்போதைக்கு project இல்லை… நானும் இங்கேயே வர்றதுக்கு பார்த்துட்டு இருக்கேன்…. என்ன தான் சென்னையிலே வசதி வாய்ப்பு இருந்தாலும் நம்ம காட்டோட இருக்குற மாதிரி நிம்மதி இருக்குமாங்க மாமா?” – ரமேஷ் அவரது ஆலோசனையை ஆமோதித்தான். ரவிக்கு ஏனோ ரமேஷ் சீக்கிரம் கோயபுத்தூர் வந்துட்டா எவ்வளவு நல்லா இருக்கும் என்று தோன்றியது.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
Loading ... |
“நீ வந்தின்னா அப்படியே நம்ம ரவியையும் உன் கம்பெனியிலே இழுத்துக்குவேங்குற நப்பாசை தான்” என்று சொன்ன அப்பாவை கோபத்தோடு முறைத்துப்பார்த்தான்.
“வேணாம்பா… என் பையனோட தன்மானத்துக்கு பங்கம் வந்துடுச்சுன்னு என்னை முறைக்கிறான் பாரு..” ரவியின் அப்பா ஜகா வாங்கினார்.
வீட்டுக்கு போகும் வழியில் ஏனோ ரவிக்கு தன் மனதை ரமேஷின் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்தது போல தோன்றியது. “டேய்! வழியப்பாத்து வண்டிய ஓட்டு… கவனத்தை எங்கே வச்சிருக்கே? என்று அப்பா அதட்டியபோது தன்னுடைய பல்ஸார் தார் ரோட்டின் விளிம்பிலிருந்து சறுக்க இருந்ததை லாவகமாக தவிர்த்தான்.
ரமேஷ் கிட்டே நம்பர் கேட்டிருக்கலாமா? சே! அவன் கிட்டே இதுவரைக்கும் சேர்ந்தாப்புல நாலு வார்த்தை பேசினது இல்லை. இப்போ நான் நம்பர் கேட்டா அப்பா சொன்ன மாதிரி வேலைக்காக காக்கா புடிக்கிறேன்னு ஆயிடுமே. ரவியின் உள்ளத்தில் லேசாக புயலடிக்க ஆரம்பித்தது. இரவு சாப்பாடு முடித்துவிட்டு படுத்தபோது வழக்கமாக வரும் தூக்கத்தை ரமேஷின் நினைவுகள் விரட்டியடித்தது.
ரமேஷுக்கும் தனக்குமான பள்ளி / கல்லூரி சமயத்து நினைவுகளை கஷ்டப்பட்டு நினைவுக்கு கொண்டுவர முயற்சித்தான். ஆனால் அப்படி குறிப்பிடத்தகுந்த அளவுக்கு பெரிதான நிகழ்வுகள் எதுவும் இல்லை. ஏன் அவன் கிட்டே எனக்கு அப்போ பேச தோணலை ஆனா இப்போ அவன் கிட்டே மட்டும் பேச தோணுது..”டாய் மணல்மூட்டை தடியா… என்று செல்லமாக முனகிக்கொண்டு குப்புறப்படுத்து தலையணையை ரமேஷாக நினைத்து கட்டிக்கொண்டபோது கீழே படுத்திருந்த அம்மா “நடுராத்திரில தூங்காம அப்படி என்னடா யோசனை?” என்று முனகியபோது தன்னை சுற்றி இருட்டாக இருந்ததால் நள்ளிரவை தாண்டியிருக்கும் என்று உணர்ந்தான்.
அடுத்த நாள் வண்டியை ஆஃபீஸின் Parking-ல் நிறுத்தியபோது ரவிக்கு அன்று ஈச்சனாரி பிள்ளையாருக்கு கன்னத்தில் போட்டுக்கொள்ளாதது நினைவுக்கு வந்து கொஞ்சம் வெட்கமாக இருந்தது. எப்படி அந்த பகுதியை தாண்டி வண்டி ஓட்டி வந்தபோது பிள்ளையாரை மறந்தோம் என்பதை விட, எப்படி அந்த பரபரப்பில் விபத்து எதுவும் ஏற்படுத்தாமல் ஆஃபீஸுக்கு வந்தோம் என்று தன் மீது ஆச்சரியம் தான் வந்தது. சீட்டில் சரிந்து அன்றைய வேலை பரபரப்பில் தன்னை இழந்தபோதும் அவ்வப்போது ரமேஷின் நினைவு அவனை தடம்புரள செய்துக்கொண்டிருந்தது.
மாலை வீட்டுக்கு வந்ததும் தன் மொபைலில் Facebook-ஐ திறந்து தெரிந்த நண்பர்களுடைய profiles மூலமாக ரமேஷின் profile-ஐ கண்டுபிடித்தபோது அது “Private Account” என்று எந்த தகவலையும் தர மறுத்தது. ஆர்வத்தோடு ரமேஷுக்கு ஒரு Friend request-ஐ தட்டிவிட்டான். பதில் எதுவும் வந்திருக்கிறதா என்று நிமிடத்துக்கொரு தடவை மொபைல் பார்த்துக்கொண்டிருந்தபோது “அந்த எழவை கொஞ்சம் கீழே வச்சுட்டு சுத்திலும் என்ன நடக்குதுன்னு தான் பாரேன்” என்று வசவுகளோடு அம்மா தட்டில் தோசையும், தேங்காய் சட்னியும் வைத்தார்.
“ஏன் இப்படி தெனமும் காலையிலேயும் ராத்திரியிலேயும் தோசையே போட்டு கொல்லுறே?” என்று பதிலுக்கு கத்தினாலும் ரவிக்கு அம்மா சொல்வதில் தவறேதும் இல்லை என்று புரிந்தது. அன்றிரவு ரவியின் தான் எதை தேடுகிறோம் என்று தெரியாமலேயே நிமிடத்துக்கொரு தடவை சியோமியின் ஸ்கிரீனை உயிர்ப்பித்து பார்த்துக்கொண்டு கழித்தான்.
சரியாக மூன்று நாட்களும் பதினாறரை மணி நேரங்கள் கழித்து ரவியின் Gmail “Your friendship request has been accepted” என்று மொட்டையாக அறிவிக்க, ரவி ஆர்வத்தோடு Facebook-கை திறந்து பார்த்தான். புதிய நட்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதே தவிர செய்திகள் எதுவும் வரவில்லை. Messenger-ல் “ஹாய் ரமேஷ்… எப்படி இருக்கீங்க?” என்று ஒரு வரி செய்தியோடு தன் உயிரையும் சேர்த்து அனுப்பினான் ரவி. விடிய விடிய Messenger-ரை வெறித்து வெறித்து பார்த்தும் பதில் எதுவும் வராததால் மனது வெற்றிடமாக, ரவி இயந்திர கதியில் அடுத்து நாளைக்கு தயாரானான். அடுத்த நாள் மாலை Messenger-ல் பார்த்தபோது “Seen” என்று தெரிவித்தது ஆனாலும் பதில் வராததால் ரவி இடிந்து போனான். ரமேஷை மறக்க முயற்சித்தான். அவனது மறக்கும் முயற்சி கூட கூட, ரமேஷின் நினைவுகள் இன்னும் அதிகமாக அலையடித்தது. அந்த விரகக்கடலில் ரவி விருப்பமே இல்லாமல் சிக்கிக்கொண்டு மீண்டு வர முடியாமல் திணறினான்.
இந்த தத்தளிப்பில் ஒரு வாரம் ஓடியிருந்தது. “அப்படி என்ன அவன் நினைப்பு? அவன் கிட்டே சின்ன வயசுலயே நாம அதிகம் பேசுனதில்ல… இப்போ ஏன் அவனை நெனச்சு உருகனும்? ஒருவேளை தனியா இருக்குறதால இப்படி இருக்கேன் போல…” ரவி தன்னுடைய பிரச்சனைக்கு தீர்வு கண்டுபிடித்துவிட்டதாக நினைத்து அடுத்த நாள் மாலை ஆஃபீஸீல் இருக்க, கூட இருந்தவர்கள் அவனை மேலும் கீழும் பார்த்தார்கள்.
“என்ன மாப்ள… நீ கிளம்புறேன்னா 5:30 மணின்னு நாங்க time set பண்ணுறோம்… இன்னைக்கு இப்படி இங்கேயே இருந்து எங்களுக்கு அதிர்ச்சி குடுக்குறே? வண்டி எதுவும் ரிப்பேரா? நான் வேணும்னா கொண்டுவந்து விடட்டுமா? செந்திலின் கேலிக்கு நெளிவதை தவிர ரவிக்கு வேறு எதுவும் தோன்றவில்லை. சங்கடமாக சிரித்து சமாளித்தான்.
அடுத்த சில நாட்களில் ரவியால் ரமேஷை மறக்க முடியாவிட்டாலும் அந்த நினைவுகளை மாற்றிவைத்துவிட்டு தன் இயல்பு வாழ்க்கைக்கு ஓரளவுக்கு திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில் அவனது Messenger கண்ணடித்தது.
“சாரிடா! உன்னோட மெசேஜை இப்போ தான் படிச்சேன். என்னோட நம்பர் +91-XXXXXXXXXXX. எனக்கு இனிமே WhatsApp-ல ping பண்ணு.”
மெல்ல மெல்ல தரையில் நடக்க ஆரம்பித்த ரவி மீண்டும் றெக்கை முளைத்து வானத்தில் பறக்க ஆரம்பித்தான். ரமேஷின் பெயரை Contacts-ல் சேமிக்கும்போது மறக்காமல் Favourites-ல் சேர்த்தான். சன் மியூசிக்கில் “இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே” பாட அதில் ரேவதியின் பரவசமும் தன்னுடைய சந்தோஷமும் ஒன்று போல இருப்பதாக உணர்ந்தான்.
ரமேஷுக்கு message அனுப்ப கை பரபரத்தது. ஆனால் என்ன அனுப்புவது? ரொம்ப யோசனைக்கு பிறகு அதைவிட ரொம்ப மொக்கையாக “Hi, How are you?” என்று அனுப்பினான். கொஞ்ச நேரம் வாட்ஸப்பையே பார்த்துக்கொண்டிருந்தான். செய்தி சென்றுவிட்டதற்கு அறிகுறியாக இரட்டை டிக் வந்தது. அது நீல நிறத்துக்கு மாறவேண்டும் என்று பதைபதைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான். சிலநேரத்துக்கு பிறகு குளித்துவிட்டு துண்டை இடுப்பில் கட்டியவாறே மொபைலை எடுத்து பார்த்தபோது Ticks நீல நிறத்துக்கு மாறியிருந்தன. ஆனால் பதில் எதுவும் வரவில்லை.
மதியம் உணவு இடைவேளையின் போது மொபைலை பார்த்தபோது Notification Area-ல் “Send your updated cv to [email protected]” என்று ரமேஷிடம் இருந்து WhatsApp செய்தி வந்திருந்தது. இப்போது புதிய வேலை தேடவில்லை என்றபோதும் கேட்டது ரமேஷ் என்ற ஒரே காரணத்துக்காக தன்னுடைய CV-யை ரமேஷின் மின்னஜலுக்கு அனுப்பி வைத்தான்.
“நாளைக்கு எங்கே மச்சி டிரீட்?” ரவியிடம் அவன் சகஊழியனான வினீத் கேட்க, அவனது அலுவலகமே தலையை நிமிர்ந்து பார்த்தது.
“டிரீட்டா?”
“ஏய்! டபாய்க்காதே… நீ சொல்லலைன்னா நாளைக்கு உன்னோட பிறந்த நாள்ன்னு எங்களுக்கு தெரியாதா? அதுக்கு தான் HR-ல ஆள் வச்சிருக்கோம்ல…”
“இவனுக்கு ஓசி சரக்குன்னா மூக்குல வேர்த்துடுமே…” என்று மனசுக்குள் திட்டிக்கொண்டே,
“ஹா! ஹா! சின்ன வயசுல என் தொல்லை தாங்காம, கைக்கு வந்த தேதிய போட்டு என்னை ஸ்கூல்ல சேர்த்துட்டாங்க… சர்டிஃபிகேட்ல இருக்குறது dummy… உண்மையான பர்த்டேக்கு இன்னும் நாள் இருக்கு…” ரவி சமாளித்தான்.
“இந்த கஞ்சப்பையன் கிட்டே இருந்து ஒரு புளிப்பு மிட்டாய் கூட வாங்கிடமுடியாதே” என்று வினீத் திட்ட, எல்லாரும் கமுக்கமாக சிரித்தார்கள்.
அடுத்த நாள் காலையில் அம்மா உலுக்கி எழுப்பினார் “டேய்! பொறந்த நாளும் அதுவுமா இப்படியா தூங்குவே? சீக்கிரமா எழுந்து குளிச்சிட்டு கோவிலுக்கு போயிட்டு வா.. அதுக்குள்ள பாயாசம் கலந்து வச்சிடுறேன்” என்று அம்மா கதற, ரவி நிதானமாக எழுந்து அவரை கட்டிப்பிடித்து “தாய் மண்ணே வணக்கம்” என்று பாடிவிட்டு போனான். பாதி குளியலில் என்னவோ தோன்ற, உடம்பை சரியாக அலசாமல் துண்டை எடுத்து தன் மர்மபிரதேசத்தை மட்டும் மறைத்துக்கொண்டு ஓடிவந்து மொபைலை எடுத்தான்.
“Happy Birthday Ravi” என்று ரமேஷிடம் இருந்து வந்த செய்தியை பார்த்துவிட்டு துண்டை எடுத்து காற்றில் உதறி சந்தோஷமாக ‘கெட்ட’ ஆட்டம் போட, யதேச்சையாக அறைக்குள் வந்த அம்மா “கருமம்…” என்று தலையில் அடித்துக்கொண்டார். “Thanks Ramesh…. என்று சந்தடி சாக்கில் ஏகப்பட்ட ஹார்ட்டின்களை போட்டு தன் ஈர்ப்பை நாசூக்காக சொன்னான். வழக்கம் போல பதில் உடனே வரவில்லை.
அன்று ஆஃபீஸில் யாரும் கேட்காமலேயே ரவி எல்லோருக்கும் சமோசாவும், Badam Kheer-ம், கேக்கும் பரிமாற நிறைய பேருக்கு நெஞ்சுவலி வராத குறை.
ரமேஷிடம் இருந்து அவ்வப்போது செய்திகள் வரும். இப்போதெல்லாம் ரவி கொஞ்சம் தைரியமாக செய்திகளின் இடையிடையே ஹார்ட்டின்களும், கிஸ் எமோஜிகளும் சந்தடி சாக்கில் சேர்த்து அனுப்புவான். நாள்பட ரமேஷிடம் இருந்து வழக்கத்தை விட கொஞ்சம் விரைவாக பதில்கள் வர ஆரம்பித்தன. ஆனால் இவன் அனுப்பியது போல ஹார்ட்டின்களோ இல்லை முத்தங்களோ வருவதில்லை. ரவிக்கு ரமேஷுடைய பதில்களே பரவசமாக இருந்ததால் இந்த எமோஜிகள் பற்றி கவலை இல்லை.
சனிக்கிழமை காலையில் அம்மா ஆவி பறக்க இட்லியின் மீது அரைத்த குழம்பை ஊற்றிக்கொண்டிருக்க, பக்கத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்த அப்பா “தம்பி! என்னை மாசு வீட்டுக்கு கூட்டிட்டு போறியா? அவன் பேரனுக்கு மாசாணி கோவில்ல மொட்டை போடறதுக்கு கிடா பிடிக்க போகனும்”.
“ரமேஷும் ஃபேமிலியும் வந்திருக்காங்களா?”
“இந்த நேரத்துக்கு வந்திருக்கனும்… அவன் பாவம் ராத்திரி முழுசும் பஸ்ல வந்திருப்பான்… அதனால நானும் மாசுவும் போறோம்..”
ரமேஷ் ஏன் தான் வருவதை சொல்லவில்லை என்ற கோபம் இருந்தாலும், ரவிக்கு ரமேஷை பார்க்கப்போகிறோம் என்ற நினைப்பு எல்லா உணர்ச்சிகளையும் பின்னுக்கு தள்ளி சந்தோஷம் மனசெங்கும் நிறைந்திருந்தது.
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 30/04/2017
Feedback |
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
கதை எப்படி இருக்கு? |
Picture of the day |
---|