உங்கள் தொடர்கதைகளில் வரும் கே-கள்ள உறவுகள் சரியா?
நான் இந்த வலைமனையை படிக்கும் சாமானியர்களுக்கும், சமுதாயத்துக்கு நல்லது கெட்டது என அறிவுரைகள் எதையும் சொல்ல முனையவில்லை. இந்தியாவில் மட்டுமல்ல உலகில் தங்கள் சமபாலீர்ப்பை மறைத்து கல்யாணம் செய்து, கடைசி வரை உண்மை வெளியே தெரியாமல் உயிரை விட்ட தன்பாலீப்பாளர்களின் எண்ணிக்கை கோடானுகோடிகளை தாண்டும். அப்படி இருக்கும் அனைவரும் தங்கள் துணைகளை ஏமாற்றவேண்டும் என்று நினைத்து கல்யாணம் செய்வதில்லை. சமுதாயம் மற்றும் குடும்பங்களின் அழுத்தம், வம்சம் வளர குழந்தை வேண்டும் என்றோ இல்லை கல்யாணம் செய்து பெண்ணோடு குடித்தனம் நடத்தினாலாவது தம்முடைய சமபாலீர்ப்பு மறையாதா என்கிற நப்பாசை பல பேருக்கு. தம்மை பற்றிய புரிதல் வருவதற்கு முன்பே கல்யாணம் ஆகிவிடும் பாவப்பட்ட ஜென்மங்கள் மிக அதிகம். அதனால் கல்யாணம் ஆன கே-க்கள் அனைவருமே மகாபாவிகள் அல்ல.
மேலும் Sexuality என்பது fluid-ஆன விஷயம் என்பதை பல ஆராய்ச்சிகள் உறுதிபடுத்தியுள்ளன. ரசனைகள் போல பாலீர்ப்பும் காலப்போக்கில் மாறிக்கொண்டே இருக்கக்கூடிய தன்மை கொண்டது. அதனால் கல்யாணம் செய்யும்போது கொஞ்சம் சமபாலீர்ப்பும் நிறைய எதிர்பாலீர்ப்பும் கொண்டவர்கள் காலப்போக்கில் அதன் விகிதாசாரம் மாறுவதையும் உணரலாம். எது எப்படியோ ஒரு உறவில் நடுவில் வரும் மூன்றாவது மனிதர் எப்போது கெட்டவர்களாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லையே? தம்மை போன்றவர்களை பார்த்ததும் ஈர்க்கப்படுவது இயலான விஷயம் தானே? தங்கள் உறவின் எல்லையை உணர்ந்து வாழ்வதே எல்லா திருமண பந்தத்துக்கு அப்பாற்பட்ட உறவுகளுக்கும் நல்லது.